ஸ்ரீகஜமலை தெய்வஸ்தானம் ஸ்தல வரலாறு
(காலம்: திருவக்கரை ஸ்ரீ குண்டலினி மகரிசி சமகாலம்)
முன்னொரு காலத்தில் மூலிகை வனமான கஜகிரிக்குன்றில் ரசவாதத்தில் கைதேர்ந்த வசிய முனிச் சித்தரும் (குரு) கஜமலையப்பன் என்கின்ற காருண்ணிச் சித்தரும் சிவலிங்க அபியாசத்தில் தவமியற்றிடவே, குருவானவர் பரகாய பிரவேசத்தில் அடிக்கடி மறைந்து பரமாத்வாவோடு மாதக்கணக்கில் திளைத்து ரகசியமாக தோன்றுவார்.
சீடரான கஜமலையப்பர் குரு வழிகாட்டு நெறிப்படி எம்பெருமான் திருவுருவைப் பூஜித்து வரலானார்.
குருவும் திரும்ப வருவார் என எண்ணியிருந்த சீடர் பல ஆண்டுகள் ஆயினும் திரும்பாத சித்த ஆசானின் தவமேன்மை எண்ணி வியந்து சிவலயமாகி அழுது தொழுது நிற்கவே, காலம் கடந்த நிலையாம் காலதேவரின் ஸ்வரூபமான ஸ்ரீ மஹா பைரவர் / மூலக்கனலாம்உச்சிஷ்டர் / ஸ்ரீவாலையாம் சாம்ராஜ்யவாராஹிதேவி மூலமந்திரம் அசரீரியாய் ஒலிக்க, ஆஹா இதுவே குரு உபதேசம் என்றெண்ணி உருகி சிரத்தையுடன் உபாசித்து ஜபித்து வரவே, ஓராண்டு முடிவில் குரு அதே மாசி மஹாசிவராத்திரியன்று சிவ ஐக்யமாகி ஜோதியாய்வான் கலந்தார். சுயம்பு மண் நின்றது.
காலங்கள் உருள, ஆலய பிரதான அர்ச்சகர் மற்றும் சில அன்பர்கள் சொப்பனத்தில் வெவ்வேறு இடங்களில் ஒருங்கே தோன்றி, ஆலயம் அமைக்க கட்டளையிடவே,
ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகஜகிரீஷ்வரர் மூலவராகி ஸ்ரீ ககமலை தெய்வஸ்தானம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவ்வாலயம் வியாபகம் ஆனது.
இன்று இத்தெய்வஸ்தானம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், தொன்னாடு கிராமத்தில் கஜகிரிக்குன்று கிழக்கு மலையடிவாரத்தில், உலகெங்கும் உள்ள பக்தர்கள் குடும்பங்களில் ஒளிவிளக்காக அருள்பாளித்து வருகிறது.